Pages

இப்படி ஒரு தியாகி இனி நமக்கு கிடைக்க மாட்டார்!

Monday, January 17, 2011

1921-ல் மகாகவி பாரதி மறைந்தபோது மிகக் குறைவானவர்களே வந்திருந்தனர் என்பது வருத்தத்துடன் அடிக்கடி நினைவுகூரப்படும் செய்தி. ஆனால், 90 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதும்கூட நிலைமையில் பெரிய மாற்றம் எதுவுமில்லை.

2011, ஜனவரி 2 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் மிகப் பெரிய தியாகியொருவர் மறைந்தார், தனது 94-வது வயதில். மறைவு கேட்டு இல்லத்துக்கு வந்து இருந்தது சுமார் 25 பேர். நூறு பேர் வந்து சென்றவர்கள். மயானத்தில் நூற்றிச் சொச்சம். வரலாறும் இந்த சமுதாயமும் மறக்கக்கூடாத, ஆனால் மறந்துவிட்ட எத்தனையோ விடுதலைப் போராட்ட தியாகிகளில் ஜி.எஸ். லட்சுமண அய்யரும் ஒருவர். 

ஒருகாலத்தில், நகர்மயமானதன் பரபரப்புக்குள் வீழாத கோபி என்ற கோபிசெட்டிபாளையத்தில் பஸ்ஸிலிருந்து இறங்கி, அய்யர் வீடு எங்கே என சின்னக் குழந்தையைக் கேட்டால்கூட அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டுவிடும். 

சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவருக்கு அந்தளவுக்கு மதிப்பு, மரியாதை. ஜாதி, மதப் பாகுபாடு எதுவுமின்றி இந்தப் பகுதியிலுள்ள அனைத்து வீடுகளிலும் அய்யரைப் பார்க்கலாம். சுகம், துக்கம் எதுவானாலும் அழைப்பு வந்துவிடும், அய்யர் அங்கேயிருப்பார். இவருடைய தந்தை டி. சீனிவாச அய்யர், அந்தக் காலத்தில் கோபி, பவானி, கொள்ளேகால் இரட்டை மெம்பர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். 1931-ல் மகாத்மா காந்தியின் அழைப்புக்கு இணங்க காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் ஹரிஜன மக்களை வீட்டுக்குள் அழைத்தனர், விருந்துகள் வைத்தனர், தோட்டக் கிணறுகளில் தண்ணீர் எடுத்துக்கொள்ளச் செய்தனர். லட்சுமண அய்யரின் வீட்டுக்குள்ளும் ஹரிஜனங்கள் அழைக்கப்பட்டனர். விருந்து வைக்கப்பட்டது. 

சும்மா விடுமா, சொந்தமும் சமூகமும். 1931 முதல் 36 வரை அய்யரின் குடும்பம் சமூக பகிஷ்காரம் செய்யப்பட்டது. உயர் ஜாதியினர் புறக்கணித்தனர். 1938 முதல் 44 வரையிலான காலகட்டத்தில் வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்ற அய்யர், கோவை, அலிப்பூர், பெல்லாரி, வேலூர், பவானி எனப் பல்வேறு சிறைகளில் மூன்றரை ஆண்டுகளைக் கழித்திருக்கிறார். மனைவி, மாமனார், மாமியாரெல்லாமும்கூட இவருடன் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றிருக்கின்றனர். 

1944-ல் வார்தா சென்று மூன்று நாள் தங்கியிருந்த லட்சுமண அய்யரிடம், நீ பிராமணன்தானே, விடுதலைப் போராட்டத்துக்கு நிறைய பேர் இருக்கிறார்கள், ஊருக்குத் திரும்பியதும் ஹரிஜன சேவை செய்யத் தொடங்கு, அதுவே என்னுடைய விருப்பம் என்று ஆணையிட்டிருக்கிறார் மகாத்மா. கடைசி வரையிலும் காந்தியின் கட்டளையை நிறைவேற்றுவதில் கவனமாக இருந்தார் அய்யர். துப்புரவுத் தொழிலாளர்களை ஊருக்குள்ளே அழைத்துவந்து குடியிருப்புகளைக் கட்டித் தந்தவர் அய்யர். அரசியல் தலைவர்களைப் பொருத்தவரையில் அந்த நாள்களில் ஒரு சத்திரம் போலத்தான் இவருடைய வீடு. எந்நேரமும் சமையல் நடந்துகொண்டிருக்கும். சித்தரஞ்சன் தாஸ், பாபு ராஜேந்திர பிரசாத், ராஜாஜி, அருணா ஆசப் அலி, டாக்டர் அன்சாரி, சீனிவாச அய்யங்கார், காமராஜர், பெரியார் எனத் தலைவர்களின் பட்டியல் நீண்டுசெல்லும். 

1969-ல் காங்கிரஸ் பிளவுற்றபோது காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸில் பணியாற்றத் தொடங்கி, ஜனதா தளத்திலும் தொடர்ந்தார். ஆனால், அவருடைய செயல்பாடுகள் அன்றாட அரசியலுக்கு அப்பாற்பட்டவையே. பிரிட்டிஷ் காலக் குற்றப்பரம்பரைச் சட்டத்தை ரத்து செய்தபோது, ராஜாஜி கூறிய அறிவுரைப்படி, நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த ஒரேயொரு சிறுவனுடன் இவர் தொடங்கிய விடுதியில் இப்போது சில நூறு மாணவ, மாணவியர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே. அந்தக் காலத்தில் இவர்கள் குடும்பத்துக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நஞ்சையும் புஞ்சையுமாக 380 ஏக்கர் நிலம். ஆனால், இப்போது அவர் குடியிருந்த வீடுதான் மிச்சம். ஒரு வீட்டைத் தவிர, இரு மகன்களுக்கும் ஒரு சென்ட் நிலம்கூடத் தரவில்லை. 

இவர் கொடையென வழங்கிய இடங்களில்தான் இன்றைக்குக் கோபிசெட்டிபாளையத்திலுள்ள பல கல்வி நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. வைரவிழா மேனிலைப் பள்ளி, பழனியம்மாள் பள்ளி, டி.எஸ். சாரதா வித்தியாலயம், விவேகானந்தா ஐ.டி.ஐ... இன்னும், ஸ்ரீராமபுரம் ஹரிஜன காலனி, துப்புரவுத் தொழிலாளர்களுக்கான காலனி... அவருடைய மறைவுக்காக ஒரேயொரு பள்ளி மட்டும் விடுமுறை அறிவித்தது. கமிட்டி உறுப்பினர் (?) மரணத்துக்காக விடுமுறை வழங்குவதில்லை என்பது கொள்கை முடிவு என ஒரு பள்ளி நிர்வாகம் தெரிவித்துவிட்டது! (கோடி கோடியென விலை உயர்ந்துவிட்ட கோபி நகருக்குள் லட்சுமண அய்யருக்கென இப்போது ஒரு சென்ட் இடம்கூட இல்லை). 

தக்கர் பாபா வித்தியாலயம் என்ற தொடக்கப் பள்ளி, இரு பால்வாடிகள், இரு குழந்தைகள் காப்பு மையங்கள் எல்லாமும் இவர் தொடங்கி நடத்தியவை. எல்லாமே இலவச சேவை. விவேகானந்தா ஐ.டி.ஐ. என்ற தொழிற்கல்வி நிலையமும் உண்டு. அரசு மருத்துவமனையில் இவருடைய தந்தை பெயரில் ஒரு வார்டு உண்டு, நிலம் வழங்கியது பற்றி உறுதிப்படுத்த முடியவில்லை. 1952 முதல் 55 வரையிலும் 86 முதல் 92 வரையிலுமாக இரண்டு முறை கோபி நகர்மன்றத் தலைவராகவும் இருந்தவர் அய்யர். 

1955-ல் இவர் கொண்டுவந்ததுதான் கோபி நகர் குழாய்த் திட்டம். புஞ்சைப் புளியம்பட்டி செல்லும் சாலையில் கோபிக்கான நீரேற்று நிலையம் இருக்கும் இடமும்கூட அய்யருடையதுதான். 1986-ல் இவருடைய காலத்தில்தான்- கோபிசெட்டிபாளையத்தில் - முதன்முதலாக மனிதக் கழிவை மனிதன் சுமக்கும் அவலம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது. அரசு நிதியுதவியுடன் அனைத்து உலர் கழிப்பிடங்களும் நீரடிக் கழிப்பிடங்களாக மாற்றப்பட்டன. ஆனால், அத்தகைய அய்யருடைய மரணத்தின்போது அவரால் பயன் பெற்ற, பலன் பெற்ற பெரும்பாலானோர் வரவில்லை. 

அன்றைக்குக் கோபிசெட்டிபாளையம் வழியேதான் மாவட்ட ஆட்சியர் சென்றார், வரவில்லை. எம்.பி. வரவில்லை, எம்.எல்.ஏ. வரவில்லை. நகர்மன்றத் தலைவிகூட வரவில்லை. கோட்டாட்சியர் மட்டும் வந்தார், வாழ்நாள் முழுவதும் வழங்கிக் கெட்ட தியாகிக்கு அஞ்சலி செலுத்த அல்ல, தியாகிகள் செத்தால் வழங்கப்படும் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகையை வழங்குவதற்காக (அந்தத் தொகையையும் உடனே ஹரிஜன விடுதிக்குத் தந்துவிட்டனர் குடும்பத்தினர். அய்யரின் விருப்பப்படியே அவருடைய கண்களும் தானமாக வழங்கப்பட்டன). 

(தி.மு.க.விலிருந்து என்.கே.கே. பெரியசாமி, சுப்புலட்சுமி ஜகதீசன், ம.தி.மு.க.விலிருந்து கணேசமூர்த்தி, பா.ஜ.க.விலிருந்து சி.பி. ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து பி.ஆர். நடராஜன், ஜனதாதளத்தின் குருமூர்த்தி ... போன்றோர் வந்தனர். ஒரு தனியார் கல்லூரி மாணவிகளும், ஹரிஜன விடுதி மாணவிகளும் வந்து அஞ்சலி செலுத்தினர்.) போர்த்தலாமா, கூடாதா என்பதை உறுதி செய்ய முடியாத குழப்பத்தில் அவருடைய சடலத்தின் மீது தேசியக் கொடிகூட போர்த்தப்படவில்லை. 

பிராமணக் குடும்பங்களில் மரணத்துக்காக அவ்வளவாக அழ மாட்டார்கள் என்பார்கள். ஆனால், லட்சுமண அய்யரின் சடலம் கிடத்திவைக்கப்பட்டிருந்தபோது ஒரேயொரு பெண் மட்டும் கடைசி வரை கதறியழுது கொண்டிருந்தார். அவர், அய்யர் வீட்டில் அவருக்குப் பணிவிடை செய்துவந்த ஹரிஜனப் பெண்! 1995, ஜூலையில் ஒருநாள் அவரைப் பார்க்கக் கோபிக்குத் தேடிச் சென்றபோது அவரில்லை. வீட்டுக்கு வெளியே ஒரு நோட்டுப் புத்தகம் தொங்கிக் கொண்டிருந்தது. எழுதிவைத்துவிட்டுச் செல்லுங்கள், அவர் உங்களைத் தேடி வந்துவிடுவார் என்றார்கள் அருகே இருந்தவர்கள். எழுதிவைத்துவிட்டுப் பேருந்து நிலையம் சென்று காத்திருந்தநேரத்திலேயே, ஒருவர் தேடி வந்துவிட்டார், அய்யர் உங்களைக் கையோடு அழைத்துவரச் சொன்னார் என்றபடி! நடமாட முடிந்தவரை அய்யர் அவ்வாறே ஒவ்வொருவரையும் தேடிச் சென்றே வாழ்ந்து கழித்துவிட்டார். 

அன்றைய தினம் நீண்ட நேரம் கடந்தகால நினைவுகளைப் பேசிக்கொண்டிருந்த லட்சுமண அய்யர் சொன்ன வரிகள் இப்போதும் நினைவிலாடுகின்றன: இன்று இந்தியாவிலேயேகூட கையெடுத்துக் கும்பிடக்கூடிய தலைவர்கள் யாரும் இல்லை. அத்தனை பேரும் ஆடம்பரத்திலும் விளம்பரத்திலும் சுயநலத்திலும்தான் மயக்கம் கொண்டிருக்கிறார்கள். காந்தியைப் போல, காமராஜரைப் போல ஒரு தலைவர் இல்லை. இன்று எந்த வழியிலாவது சம்பாதிப்பதையும் பிழைப்பதையுமே பெரிதாகக் கொண்டிருக்கிறார்கள் தலைவர்கள். தவிர, தியாகத்தைப் பெரிதாகக் கருதும் மக்களும்கூட நாட்டில் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள். 

அன்று அவர் சொன்னது எத்தனை பெரிய உண்மை! முன்னாள் சாராய வியாபாரியான ஒன்றியச் செயலர் ஒருவரின் மாமியார் இறந்துபோனால்கூட நூறு கார்கள் வரிசைபோட, ஆயிரம் பேர் திரண்டிருப்பார்கள். ஏனென்றால் அவரால் ஆனதும் ஆகக்கூடியதும் எத்தனையெத்தனையோ! காலாவதியாகிப்போன ஒரு தியாகியின் சாவுக்குச் செல்வதில் யாருக்கு என்ன ஆகிவிடப் போகிறது. ஆனால், ஒன்றுமட்டும் நாம் மறந்துவிடக்கூடாது, இவற்றையெல்லாம் கவனித்துக்கொண்டிருக்கும் இந்த சமுதாயத்திலிருந்து ஒரு தியாகிகூட இனி உருவாக மாட்டான், ஜாக்கிரதை.

நன்றி தினமணி

இவரால் பயன்பெற்றவர்களின் நானும் ஒருவன் 1992ம் ஆண்டு கோபி வைரவிழா மேல்நிலைப்பள்ளியில் படிக்க எனக்கு சிபாரிசு கடிதம் கொடுத்து சீட் வாங்கிக்கொடுத்தவர் இந்த மாமனிதர்தான்..

நேற்று முன்தினம் ஐயாவின் வீட்டுக்கு சென்றேன் அவரால் பயன் பெற்ற நிறைய பேர் இருந்தனர். ஐயாவின் படத்தின் முன் நின்று அஞ்சலி செலுத்தி திரும்பினேன்..ஐயாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

10 comments:

{ sakthistudycentre-கருன் } at: January 17, 2011 at 11:03 PM said...

நன்றி நண்பரே ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி

{ சேட்டைக்காரன் } at: January 17, 2011 at 11:11 PM said...

மனதை நெகிழவைத்த இடுகை! அன்னார் இறந்தகாலத்தின் சுவடாய் இருந்து மறைந்திருக்கிறார்.அதை இடுகையாய் எழுதி பதிவு செய்து விட்டீர்கள். இப்படியும் மனிதர்கள் வாழ்ந்து மறைகிறார்கள் என்பது ஆறுதலையும் ஏக்கத்தையும் அளிக்கிறது.

{ dheva } at: January 17, 2011 at 11:18 PM said...

நெஞ்சை உலுக்கிவிட்டது சதீஷ்...

உங்களைப்போன்ற நிறைய பேர் பலன் அடைந்திருப்பார்கள் தானே? காலம் காலமாய் நமது சமுதாய்ம் நல்லவர்களுக்கு கொடுக்கும் சன்மானம் இதுதானா என்று எண்ணும் போது இதயம் வலிக்கிறது.

உங்களோடு சேர்ந்து எனது அஞ்சலிகளையும் ஐயாவின் ஆன்மா சாந்தியடைய ஆழ்ந்த பிரார்த்தனைகளையும் சமர்ப்பிக்கிறேன் சதிஷ்.

{ middleclassmadhavi } at: January 17, 2011 at 11:20 PM said...

உண்மையான தியாகியை அடை்யாளம் காட்டியிருக்கிறீர்கள். என் கண்ணீர் அஞ்சலி..

{ TERROR-PANDIYAN(VAS) } at: January 17, 2011 at 11:32 PM said...

என் அழ்ந்த இறங்கலை தெரிவித்து கொள்கிறேன். ஒரு உண்மை தியாகியின் நினைவுகளை பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி! அவருடைய ஆத்மா அமைதியாக உறங்க இறைவனை பிராத்திக்கிறேன்.

{ ஆதவா } at: January 17, 2011 at 11:36 PM said...

மிகவும் வருத்தமான செயல்!! இம்மாதிரியான தியாகிகளைப் புறக்கணிப்பது, பெற்ற தாயை எட்டி உதைப்பதற்குச் சமான செயலாகும்!!

அவருக்கு என் அஞ்சலி!!

{ தினேஷ்குமார் } at: January 17, 2011 at 11:36 PM said...

உண்மையை அடையாளம் கண்டுகொண்டேன் நண்பரே அவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்

{ சே.குமார் } at: January 17, 2011 at 11:38 PM said...

உங்களோடு சேர்ந்து எனது அஞ்சலிகளையும் ஐயாவின் ஆன்மா சாந்தியடைய ஆழ்ந்த பிரார்த்தனைகளையும் சமர்ப்பிக்கிறேன்.

{ கக்கு - மாணிக்கம் } at: January 17, 2011 at 11:38 PM said...

உண்மையில் நெகிழ்த்து போனேன். அவரின் பெயர் என்றும் நிலைக்கும் வகையில் ஏதாவது செய்யவேண்டும். மக்கள் இவர் போன்ற நல்லோர்களை ஊருக்கு , சமுதாயத்துக்கு உழைத்தவர்களை போற்றி வாங்கும் மாற்றம் வர வேண்டும். நல்ல காரியம் செய்தீர்கள். இவர் அறிந்து கொள்ள ஒரு பதிவு இட்டு, இவர் போலவும் ஒரு தமிழர் நமிடையே இப்போதும் வாழ்த்து மறைத்தார் என்ற நல்ல எண்களை விதைதீர்கள். பகிர்வுக்கு நன்றி.

{ கோமாளி செல்வா } at: January 17, 2011 at 11:57 PM said...

நெகிழ்ச்சியான பதிவு அண்ணா. உண்மையில் படிப்பதற்கும் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. எத்தனை பெரிய மனிதர் , தியாகி அவரது இறப்பிற்கு கூட செல்லாத தலைவர்கள் இருந்தென்ன பயன்? எனது அஞ்சலிகளும் அவருக்கு !!

Post a Comment